×

வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் குழு மோதல் வெங்காய வெடிகளை வீசி தாக்குதல்: பாட்டு பாடி மாணவியை கிண்டல் செய்ததால் தகராறு; 18 மாணவர்கள் சஸ்பெண்ட்: 4 பேரிடம் விசாரணை

சென்னை: வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவி ஒருவரை சக மாணவன் பாட்டுப்பாடி கிண்டல் செய்ததால் ஏற்பட்ட குழு மோதலில், சக மாணவர்கள் மீது ஒரு தரப்பு மாணவர்கள் வெங்காய வெடியை வீசி தாக்குதல் நடத்தினர்.
சென்னை வேளச்சேரி நெஞ்சாலையில் குருநானக் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பொருளாதார பிரிவில் படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அப்போது பாடலுக்கு நடனம் ஆடும் போது, மயிலாப்பூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன், சக மாணவியை பாட்டுப்பாடி கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

பல மாணவர்கள் கூடியிருந்த நிலையில் கேலி செய்ததால் அந்த மாணவி அவமானம் தாங்க முடியாமல் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களிடம் கூறி அழுதுள்ளார். உடனே மாணவிக்கு ஆதரவாக சில மாணவர்கள் ஒன்று கூடி, கேலி செய்த தனுஷை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அப்போது தனுஷிற்கு ஆதரவாக சில மாணவர்கள் வந்ததால் இருதரப்பு மாணவர்களிடையே குழு மோதலாக மாறியது. ஒரு கட்டத்தில் விஷயம் பெரிய அளவில் உருவானதை கண்டு கல்லூரி நிர்வாகம் தலையிட்டு மாணவர்களை கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது, தனுஷ் தரப்பு மாணவர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய மாணவர்களை பழிவாங்க வேண்டும் என்று வெங்காய வெடியை யாருக்கும் தெரியாமல் கல்லூரிக்குள் கொண்டு வந்துள்ளனர். அப்போது தாக்குதல் நடத்திய மாணவர்கள் வரும் போது, திடீரென தனுஷ் தரப்பு மாணவர்கள் கையில் வைத்திருந்த 2 வெடிகளை அவர்கள் மீது வீசினர். இதில் ஒரு வெடி மட்டும் வெடித்து சிதறியது. வேகமாக வீசியதால் அது மாணவர்கள் மீது படாமல் சற்று தொலைவில் விழுந்து வெடித்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால் பெரிய அளவில் சத்தம் கேட்டது. உடனே வெடியை வீசிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு கல்லூரி வகுப்புகளில் இருந்த மாணவர்கள் அனைவரும் என்ன என்று தெரியாமல் மைதானத்தில் ஒன்று கூடினர்.

கல்லூரி நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் வகுப்பு அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பு அறைகளுக்கு சென்றனர். பின்னர் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி வளாகத்தில் வெடிக்காத நிலையில் கிடந்த வெடியை பத்திரமாக மீட்டு, வெடிகுண்டு நிபுணர்களின் சோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர். சோதனை அறிக்கை வந்த பிறகு தான், அது நாட்டு வெடிகுண்டா அல்லது சாதாரண வெங்காய வெடியா என தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வெடி வீசி தாக்குதல் நடத்திய தனுஷ் தரப்பை சேர்ந்த ஒரு மாணவன், மாணவிக்கு ஆதரவாக வந்த எதிர்தரப்பு மாணவர்கள் 3 பேர் என மொத்தம் 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 மாணவர்கள் சஸ்பெண்ட்: மோதல் தொடர்பாக 18 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

* வீசியது பட்டாசு தான்: – கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா
தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், ‘‘குருநானக் கல்லூரியில் வளாகத்தில் 2 மாணவர்கள் குழுக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் திருவிழாக்களில் வெடிக்கும் ஒரு பட்டாசை எதிர் தரப்பு மாணவர்கள் மீது வீசிவிட்டு ஓடிவிட்டனர். நாட்டு வெடிகுண்டு என்று தவறாக தகவல் பரவுகிறது. அது கிடையாது. திருவிழாவில் பயன்படுத்தப்படும் பட்டாசு தான். இது தொடர்பாக ஒரு மாணவரை கைது செய்துள்ளோம். மற்றொரு மாணவரை நாங்கள் தேடி வருகிறோம்’’ என்றார்.

The post வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் குழு மோதல் வெங்காய வெடிகளை வீசி தாக்குதல்: பாட்டு பாடி மாணவியை கிண்டல் செய்ததால் தகராறு; 18 மாணவர்கள் சஸ்பெண்ட்: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Velachery Guru Nanak College ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...